search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாட்டு தகவல்கள்"

    ராமாயணத்தில் ராமனின் பரிவாரப் படைகளில் மருத்துவராக இருந்தவர் சுசேனா. ராமனுக்கும், ராவணனுக்குமான யுத்தத்தின் போது லட்சுமணனை சுசேனா காப்பாற்றிய கதையை அறிந்து கொள்ளலாம்.
    ராமாயணத்தில் ராமனின் பரிவாரப் படைகளில் மருத்துவராக இருந்தவர் சுசேனா. ராமனுக்கும், ராவணனுக்குமான யுத்தம் உக்கிரமாக நடைபெற்று வந்தது. அப்போது ராவணனின் மகன் இந்திரஜித் விட்ட அம்பு தாக்கி லட்சுமணன் மயங்கி விழுந்தார்.

    இதனால் ராமன் மிகவும் கலங்கிப் போனார். அவரது கலக்கத்தைக் கண்ட சுசேனா, “ராமா! லட்சுமணன் மயக்க நிலையில்தான் இருக்கிறார். இமயமலைப்பகுதியில் உள்ள சஞ்சீவி மலையில் இருந்து சில அரிய வகை மூலிகைகளைக் கொண்டு வந்தால், லட்சுமணனை நிச்சயம் மீட்டுவிடலாம்” என்றார்.

    இந்தப் பணியைச் செய்ய அனுமன் நியமிக்கப்பட்டார். அவர் விரைவாக பறந்து சென்று சஞ்சீவி மலையில் இருந்து மூலிகையை தேடினார். அவரால் குறிப்பிட்ட மூலிகையை கண்டறிய முடியாததால், மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இதையடுத்து சுசேனா, மூலிகையைக் கொண்டு லட்சுமணனை உயிர்ப்பித்தார்.
    காசிப முனிவருக்கும், கத்ரு என்ற பெண்ணுக்கும் பிறந்த நாக குலத்தினர்களின் ஒருவனான தட்சகன் நாகர்களின் அரசனாக இருந்தவன். இவரது வரலாற்றை பார்க்கலாம்.
    காசிப முனிவருக்கும், கத்ரு என்ற பெண்ணுக்கும் பிறந்த நாக குலத்தினர்களின் ஒருவன், இந்த தட்சகன். இவன் நாகர்களின் அரசனாக இருந்தவன். இவன் காண்டவ வனத்தில் தன் இனத்தைச் சார்ந்தவர்களுடன் வாழ்ந்த வேளையில், ஒருமுறை தட்சகன் குருசேத்திரம் சென்றிருந்தான். அப்போது இந்திர பிரஸ்தம் என்ற நகரை நிர்மாணிக்கும் பொருட்டு, தட்சகன் வாழ்ந்த காட்டை அழித்து நகராக மாற்றினான் அர்ச்சுனன். அதில் தட்சகனின் குடும்பம் முழுவதும் அழிந்தது. தட்சகனின் மகன் அஸ்வசேனன் மட்டுமே உயிர் பிழைத்தான்.

    ஒரு முறை அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மன்னன், மவுன விரதத்தில் இருந்த முனிவரின் கழுத்தில் இறந்த பாம்பை போட்டு அவமதித்தான். அந்த முனிவரின் மகன், பரீட்சித்து மன்னன், 7 நாட்களில் நாகம் தீண்டி இறப்பான் என்று சாபமிட்டான். அதன்படி 7-ம் நாள் பரீட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறந்து போனான்.

    தன் தந்தையை கொன்ற தட்சகனின் நாகர் குலத்தையே வேரோடு அழிக்க நினைத்த பரீட்சித்து மன்னனின் மகன் ஜனமேஜயன், நாக வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்வியில் நாகர் இனத்தைச் சேர்ந்த அனைவரும் விழுந்து இறந்தனர். தட்சகன் தன்னுடைய நண்பனான தேவலோகத்தின் தலைவன் இந்திரனின் உதவியை நாடினான். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து ஆஸ்திகர் என்ற முனிவர், ஜனமேஜயனிடம் பேசி, நாகவேள்வியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக தட்சகன் மட்டும் உயிர் பிழைத்தான்.

    இந்து சமயத்தில் வழிபாடுகள் சிறப்பு வாய்ந்தவை. சிறப்பு வாய்ந்த, அரிய வழிபாட்டு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
    இரட்டை நடராஜர்

    கரூர் மாவட்டம் குளித்தலையில் இருக்கிறது, கடம்பவனநாதர் ஆலயம். இங்கு இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் இருவரும் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதில் ஒரு நடராஜருக்கு ஒருவருக்கு உத்ராயணத்திலும், மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.

    சப்தஸ்வர அன்னை

    கோயம்புத்தூரில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே அமைந்துள்ளது கோட்டைக்காடு என்ற ஊர். இங்கு கோவில் கொண்டுள்ள அன்னை முத்துவாளியின் தலை, கைகள், வயிறு என ஒவ்வொரு பகுதியில் தட்டும் போதும் ஒவ்வொரு ஸ்வரமாக ஒலி ஏற்படுகிறது. ஏழு ஸ்வரங்கள் தன்னிடம் அடக்கம் என்பதை இந்த அம்மன் சிலை காட்டுகிறது.

    கை கட்டிய எமன்

    கும்பகோணம் அருகிலுள்ளது தி.காவல் என்னும் கிராமம். இங்குள்ள சிவன் கோவிலில் இரு கைகளும் கட்டிப்போடப்பட்ட நிலையில் எமதர்மனும், அருகில் கையில் எழுத்தாணியுடன் சித்ரகுப்தனும் காட்சி தருகின்றனர்.

    தூணில் சரபேஸ்வரர்

    மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தூணில் சரபேஸ்வரர் வீற்றிருக்கிறார். இவருடன் சூலினி மற்றும் பிரத்யங்கரா தேவியரும் காட்சியளிக்கிறார்கள். ராகுவின் அதிதேவதை சூலினி துர்க்கை. பிரத்யங்கரா தேவி நாகத்தை மோதிரமாக அணிந்தவர். சரபமூர்த்தியின் வால்தான் ராகு பகவான். எனவே இவரை ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் வணங்க நாகதோஷம் நீங்கும்.

    யோக கேது

    சீர்காழி வட்டம் செம்மங்குடி கிராமத்தில் கேது மூர்த்தி உடலோடு ஐந்து தலை நாகம் குடை பிடிக்க யோக கேதுவாக அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார். இவரை செவ்வல்லி மலர் கொண்டு பூஜித்தால் கிரகதோஷம், வியாதிகள் நீங்கி நலம் பெறலாம்.

    சில வழிபாட்டு சடங்கு செய்யும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    * உருவச் சிதைவுள்ள பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது. பின்னம் (சிதைவு) உள்ள விக்கிரகங்களை வைத்து வழிபடக் கூடாது. அப்படி வழிபட்டால், அதோடு அதே போன்ற நல்ல விக்கிரகம் ஒன்றையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    * அட்சதை தூவும் பொழுது (திருமணவீட்டில்) உடையாத முழு அரிசியாக இருக்கவேண்டும்.

    * கோவில் மணி, சங்கு, அடுப்பு, தாலிச்சரடு போன்றவை உடைந்தால் அதன் சக்தி இழந்து போய் விடும். எனவே அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

    * துளசி இலைகளை கொத்துக் கொத்தாக வழிபாட்டிற்கு கொடுக்க வேண்டும். உதிர்த்துக் கொடுக்கக் கூடாது.

    * சுமங்கலிப் பெண்களுக்கு விருந்து வைக்கும் பொழுது, வாழை இலை கிழிந்திருக்கக் கூடாது.

    * சான்றோர்களுக்கு விருந்தளிக்கும் பொழுது, நுனி இலைபோட்டு பரிமாற வேண்டும்.

    * சிரார்த்த சடங்கு, ருது சடங்கு, புனிதச் சடங்கு மற்றும் விரத நாட்களில், கிழிந்த ஆடை, பழைய ஆடைகளை அணியக்கூடாது.
    துரியோதனன் உள்ளிட்ட 100 பேர்களான கவுரவர்களின் மாமாவும், காந்தாரியின் அண்ணனுமான சகுனி பகடை விளையாட்டில் கைதேர்ந்தவர். அவரை எதிர்த்து பகடை ஆடி வெல்வது எளிதான காரியம் அல்ல.
    துரியோதனன் உள்ளிட்ட 100 பேர்களான கவுரவர்களின் மாமாவும், காந்தாரியின் அண்ணனும் ஆவார். சகுனி பகடை விளையாட்டில் கைதேர்ந்தவர். அவரை எதிர்த்து பகடை ஆடி வெல்வது எளிதான காரியம் அல்ல.

    ஏனெனில் பகடை உருட்டும் விதம் வைத்தே எந்த எண் விழும் என்பதை கணிக்கும் அளவிற்கு திறமைசாலியாக அவர் இருந்தார். சகுனியின் சாமர்த்தியத்தால் தான் பகடை விளையாட்டில் பாண்டவர்கள், துரியோதனிடம் தோல்வியடைந்தனர். சகுனியின் சதியால் தான், தன்னிடம் தோற்ற பாண்டவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு துரியோதனன் கூறினான்.

    கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மாபெரும் குருஷேத்ர போர் நடந்ததற்கு, பகடை விளையாட்டால் பாண்டவர்களை வீழ்த்திய சகுனி முக்கிய காரணம் ஆவார். குருஷேத்ர போரில் சகுனியும் பங்கு பெற்றார். அவர் போர்க்களத்தில் சகாதேவனால் வீழ்த்தப்பட்டு உயிரிழந்தார்.
    ஜராசந்தனுடன் இணைந்து கிருஷ்ணரை சீண்டுவதையே வேலையாக செய்து வந்த சிசுபாலனை கிருஷ்ணன் தண்டித்த கதையை அறிந்து கொள்ளலாம்.
    டமகோசன் என்ற அரசனின் மகன்தான் சிசுபாலன். அவன் பிறக்கும் போதே, 3 கண்களுடனும், 4 கரங்களுடனும் பிறந்தான். ‘தங்களது மகன் சக்தி வாய்ந்தவனாக வளர்வான்’ என்றும், ‘ஒரே ஒருவரால் மட்டுமே அவனுக்கு மரணம் நேரும்’ என்றும், ‘அவனை கொல்லும் நபரின் மடியில் அமரும் போது இவனது 3-வது கண்ணும் 2 கரங்களும் மறைந்து விடும்’ என்பதையும் அவனது பெற்றோர் தெரிந்து வைத்திருந்தனர்.

    யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், தனது அத்தைக்கு பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தார். அங்கு அந்த குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்திருந்தார். அப்பொழுது குழந்தையின் மூன்றாவது கண்ணும், இரண்டு கைகளும் மறைவதை கிருஷ்ணனின் அத்தை கண்டார். தனது குழந்தைக்கு வாழ்வு அருளும் படி கிருஷ்ணனிடம் அவர் மன்றாடி கேட்டுக் கொண்டார். அதற்கு கிருஷ்ணர், “இந்த குழந்தை வளர்ந்த பின் செய்யும் தவறுகளை, நான் 100 முறை பொறுத்து அவனை மன்னித்து விடுவேன்” என்று கூறினார்.

    சிசுபாலன் வளர்ந்த பின் கிருஷ்ணனின் எதிரியான ஜராசந்தனுடன் இணைந்து கிருஷ்ணரை சீண்டுவதையே வேலையாக செய்து வந்தான். பாண்டவர்கள் இந்திரபிரஸ்தத்தில் ராஜசூய யாகம் வளர்த்தனர். அப்பொழுது அவர்கள் கிருஷ்ணருக்கு முதல் மரியாதை செய்ய எண்ணினர். அதை ஏளனம் செய்த சிசுபாலன், சபையினர் முன்பு கிருஷ்ணரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டான்.

    கிருஷ்ணர் அணிந்த மாலையில் இருந்த பூக்களை பிய்த்து போட்டான். அவன் கடைசியாக ஒரு பூவை பிய்த்து போட்டான்; அது தான் கிருஷ்ணர் அவனுக்கு வழங்கும் 100-வது மன்னிப்பு. அவன் பிய்த்து போட்ட அந்த பூ தரையில் விழும் முன் கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சிசுபாலனின் தலையைக் கொய்தார்.
    சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன் என்று தெரிந்தும் அவனை திருமணம் செய்து கொண்ட சாவித்ரி எமதர்மனிடம் இருந்து சத்யவான் உயிரை எப்படி மீட்டெடுத்தாள் என்பதை பார்க்கலாம்.
    விதிப்பயன் காரணமாக சத்யவான் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து, பெற்றோருடன் காட்டில் வசித்து வந்தான். அவனை வனத்தில் சந்தித்த இளவரசியான சாவித்ரி, காதல் வயப்பட்டாள். அவனையே திருமணம் செய்து கொள்ள எண்ணினாள். நாரதர், “சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன். அவனை திருமணம் செய்து கொண்டு என்ன பயன்” என்றார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சாவித்ரி, தனது தந்தையை தொடர்ந்து வற்புறுத்தி சத்யவானையே திருமணம் செய்து கொண்டாள். திருமணத்திற்கு பிறகு சாவித்ரி சத்யவானுடன் காட்டிலேயே வசித்து வந்தாள்.

    ஒரு நாள் சத்யவானின் ஆயுள் காலம் முடிவடையும் நேரம் வந்தது. எமதர்மன் அங்கு வந்து, சத்யவானின் உயிரைப் பறித்துச் சென்றான். இதையடுத்து சத்யவான் உயிரற்ற உடலாக தரையில் விழுந்தான். சாவித்ரி தொடர்ச்சியாக அம்மனை நினைத்து விரதம் இருப்பவள் என்பதால், அவளது கண்ணுக்கு எமதர்மன் தென்பட்டார். தன்னுடைய கணவனின் உயிரை பறித்துச் செல்லும் எமதர்மனை, சாவித்ரி பின்தொடர்ந்தாள். எமன் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அவள் சத்யவான் இன்றி திரும்பிச் செல்வதாக இல்லை.

    “சத்யவானின் உயிரைத் தவிர வேறு எந்த வரமாவது கேள்” என்று எமதர்மன் கூறியதும், சாவித்ரி சமயோசிதமாக செயல்பட்டு ஒரு வரத்தைக் கேட்டாள். அதாவது “என் கணவரின் மூலம் நான் 100 பிள்ளைகள் பெற வேண்டும்” என்று கேட்டாள். எமனும் யோசிக்காது, “அப்படியே ஆகட்டும்” என்று வரமளித்தார். பின்னர்தான் கொடுத்த வரத்தின் பின் விளைவை எமதர்மன் சிந்தித்தார்.

    இருப்பினும் சாவித்ரியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்த எமதர்மன், சத்யவானின் உயிரை அவளுக்கு திரும்பிக் கொடுத்தார். எம தர்மனின் ஆசியுடன் சத்யவான்-சாவித்ரி தம்பதியினர் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
    நம் எதிரில் வரக்கூடிய சகுனங்களே அதற்கான அறிகுறியைக் காட்டிவிடும். நல்ல சகுனங்களாக இருக்கும் பட்சத்தில் காரியங்களை முடிக்கச் செல்லலாம்.
    ஒவ்வொருவரும் ‘நாம் இன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும்’ என்று நினைத்தபடி தான் வீட்டில் இருந்து வெளியே வருகிறோம். நம் எதிரில் வரக்கூடிய சகுனங்களே அதற்கான அறிகுறியைக் காட்டிவிடும். நல்ல சகுனங்களாக இருக்கும் பட்சத்தில் காரியங்களை முடிக்கச் செல்லலாம்.

    சகுனங்கள் சுமாராக இருக்கும் பட்சத்தில் வீட்டிற்குள் மீண்டும் சென்று தெய்வங்களை வணங்கி விட்டுச் செல்லலாம். அல்லது தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் செல்வதால் சகுனத் தடைகள் மாறி நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த அடிப்படையில் ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது கோவில் மணி ஒலித்தால் காரிய வெற்றி கிட்டும். வீட்டிலிருந்து வெளியில் புறப்படும் பொழுது தண்ணீர் நிறை குடமாக வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதேபோல் பால், பூத்தட்டு, உப்பு மூட்டை வந்தால் காரியம் உடனடியாக நிறைவேறும். கர்ப்பிணிப் பெண் எதிரில் வந்தால் தொழிலில் தன லாபம் பெருகும். காகம் இடமிருந்து வலமாகச் சென்றால் எடுத்த காரியங்கள் இனிதே வெற்றிபெறும்.
    ஒவ்வொரு மனிதனுடைய நாவில் இருந்து வரும் சொற்கள், மற்றவர்களை தாக்கும் விதத்தில் அமையக்கூடாது. அவர்களை பரவசப்படுத்தக் கூடிய விதத்தில் அமைய வேண்டும்.
    ஒவ்வொரு மனிதனுடைய நாவில் இருந்து வரும் சொற்கள், மற்றவர்களை தாக்கும் விதத்தில் அமையக்கூடாது. அவர்களை பரவசப்படுத்தக் கூடிய விதத்தில் அமைய வேண்டும். ஒரு சிலர் தங்கள் பணியாளர்களிடம் ‘இந்தக் காரியத்தைச் சென்று முடித்து வா’ என்று சொல்வார்கள். முடித்து விட்டு வந்தவுடன் “வேலை முடிந்ததா?” என்று கேட்டால், கார் ஏறியது முதல் காரியம் முடிந்தது வரையான அனைத்து வேலைகளையும் அடுக்கிக்கொண்டே செல்வார்.

    உடனே முதலாளி கோபப்பட்டு “வேலை முடிந்ததா, இல்லையா?” என்பார். அதற்காகத் தான் ரத்தின சுருக்கமாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தவரை எதிர்மறை சொற்களை பேசாமல் இருப்பது நல்லது. நேர்மறைச் சொற்களை உச்சரிக்க உச்சரிக்க நேர்த்தியான வாழ்வு அமையும். நாம் சொல்லும் சொற்கள், வெல்லும் சொற்களாக அமைய வேண்டும். அதற்குத்தான் அவ்வையார், ‘நயம்பட உரை’ என்று சொல்லி வைத்தார்.

    ஒரு மனிதன் வாழ்வில் நாணயத்தோடு வாழ்ந்தால் தான் மதிப்பு அதிகம். நாணயம் என்பது நீதி, நேர்மை, ஒழுக்கத்தோடு, சொன்ன சொல் மாறாமல் நடந்துகொள்வது. அந்த நாணயத்தோடு, நாம் சொல்லக் கூடிய சொல் சுருக்கமாகவும், மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்க வேண்டும். அதைத் தான் ‘நா நயம்’ என்கிறோம். நாவால் உரைக்கும் சொற்கள் நயம்பட இருக்க வேண்டும். பேசுவது என்பது எல்லோருக்கும் அமையாது. சிலர் சிடுசிடுவென்று பேசுவர். சிலர் வம்பு வரும்படி பேசுவர். சிலர் அழகாகப் பேசுவதாக அடுத்தவரைப் புண்படுத்துவர். சிலர் அன்பாகப் பேசி அனைவரையும் தம் வசம் இழுப்பர். பழகும் நண்பர்கள் அனைவரும் நண்பர்களாகவே இருக்க, பேச்சில் நாம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    அதைத்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்று சொல்கிறார். ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் ‘பேச்சுக்கலை’ என்பது ஒரு பெரும் கலை. இந்தப் பேச்சுக்கலை மட்டும் ஒரு மனிதனிடம் இருந்தால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எவ்வளவு பொல்லாத மனிதராக இருந்தாலும் கூட சமாளித்து விட இயலும். அதற்கு சரஸ்வதி தேவியின் அருட் கடாட்சம் தேவை. பேச்சுக்கலை உள்ளவர்களிடம் பெரிய மனிதர்கள் கூட ஐக்கியமாகி விடுவார்கள். பெண்பால் புலவராக வாழ்ந்த அவ்வையார், வளவளவென்று பேசிக் கொண்டிருக்கும் அந்தக் காலத்திலும், ரத்தினச் சுருக்கமாக கருத்துக்களை எடுத்துரைத்தார். அவை நூற்றுக்கணக்காக இருந்தாலும், ‘ஒரு பானை சோற்றிற்கு ஒருசோறு பதம்’ என்பதைப் போல, ஒரு சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.

    அவ்வையின் ஆத்திச்சூடியில் ‘அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், நன்றி மறவேல்’ போன்றவற்றை கடைப்பிடித்தாலே அற்புதமான வாழ்க்கை அமையும். அறம்செய்ய விரும்பவேண்டும், கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், நன்றி மறக்கக்கூடாது என்று இரண்டேசொற்களால் இனிதாகப் புரியும் படி சொல்லி இருக்கிறார், அவ்வையார். இன்று வளரும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    சமுதாயத்தில் கண்ணியமான மனிதனாக இருந்தாலும், கடமை தவறாமல் இருந்தாலும், பணப்புழக்கம் அதிகம் உள்ளவராக இருந்தாலும் நாணயமானவராக, நம்பிக்கைக்குரிய விதத்திலே வாழவும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் அனைவரும் உங்களைப் போற்றிக் கொண்டாடுவர்.

    கம்ப ராமாயணத்தில் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று கம்பர் வர்ணிப்பார். “கண்டேன் அந்த கற்பினுக்கு அணியை என் கண்களால்” என்ற ஒரே வரியின் மூலம், சீதையைக் கண்டதையும், அவள் கற்புத் தவறாமல் இருப்பதையும் அழகாகச் சொல்கிறார். ‘கண்டேன்’ என்பது ஒரு சொல். அதைக் கேட்டதும் ராமனுக்கு ஆனந்தம். அடுத்து ‘சீதை எப்படி இருக்கின்றாளோ?’ என்ற சந்தேகம் ராமனுக்கு வராமல் இருக்க, ‘அந்தக் கற்பினுக்கு அணியை’ என்பார் அனுமன். அடுத்து முத்தாய்ப்பாக ‘என் கண்களால்’ என்று சொல்வதன் மூலம், யார் சொல்லியும் அறிந்து வரவில்லை. நானே நேரில் கண்டுவந்தேன் என்பதை எடுத் துரைக்கிறார். அனுமன் கூறியதைக் கேட்டு ராமனே மெய்மறந்து நின்றதாக கம்பர் சொல்கிறார்.

    நம் இல்லங்களில் கூட நல்ல வாக்கியங்களை ஆங்காங்கே எழுதி பதித்து வைக்கலாம். அதைப் படிக்கப் படிக்க நமக்கு வளர்ச்சி கூடும். அதனால் தான் சிலர் ‘வாழ்க வளமுடன்’, ‘வளர்க நலமுடன்’, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘கந்தா வருவாய் கருணை புரிவாய்’ போன்ற வார்த்தைகளை எழுதிப் பதித்து வைத்திருப்பர். சிலர் தொலைபேசியை எடுத்தவுடன் ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்வர்.

    இதுபோன்று நல்ல சொற்களை உச்சரிப்போம். நலமான வாழ்வை ஏற்போம். உச்சரிப்புகள் தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
    சிவபெருமானின் 64 வடிவங்களுள் ராவண அனுக்கிரக மூர்த்தி அமைந்துள்ள திருத்தலம் திருவிடை மருதூர் மட்டுமே. இந்த கோவில் பற்றிய 41 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. திருவிடைமருதூருக்கு செண்பகராண்யம், சக்திபுரம், தபோவனம், முக்திபுரம் ஆகிய பேர்கள் உண்டு.

    2. மருத மரத்தை தல விருட்சகமாக கொண்ட 3 தலங்களில் இந்த தலம் நடுவில் அமைந்து இருப்பதால் இடைமருதூர் என்ற பெயரும் உண்டு.

    3. இத்தலத்தில் அகத்தீஸ்யர்லிங்கம், காஸ்யபர் லிங்கம், சோழ லிங்கம், சேர லிங்கம், பாண்டிய லிங்கம், சகஸ்சர லிங்கம், பஞ்ச பூத லிங்கங்கள் என்று திரும்பிய திசையெல்லாம் லிங்க மயமாக காட்சி அளிக்கிறது. ஆலயத்துக்குள் 30-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் உள்ளன.

    4. இந்த தலத்தில் லிங்கங்களுக்கு அடுத்தப்படியாக விநாயகர் சிலைகளும் அதிகப்படியாக இருக்கின்றன.

    5. தமிழ்நாட்டில் உள்ள பெரிய தேர்களில் இந்த தலத்து தேரும் ஒன்று. இங்குள்ள தேர் 89 அடி உயரம் கொண்டது.

    6. இத்தலத்தின் கொடி மரம் 24 அடி உயரம் கொண்டது.

    7. சிவாலயங்களில் வலது பக்கம் அம்பிகை சன்னதி அமைந்திருந்தால் அந்த ஆலயம் திருமண கோலதலமாக கருதப்படும். அந்த வகையில் திருவிடைமருதூர் தலம் திருமணகோல தலமாக உள்ளது.

    8. தஞ்சை மாவட்டத்தில் உள்ள காரிய சித்தி தலங்களில் மனநோய் நீக்கும் தலமாக திருவிடைமருதூர் தலம் கருதப்படுகிறது.

    9. விபண்டக முனிவர் முன் தோன்றி சிவபெருமானிடம் வருடந்தோறும் தைப்பூச நாளன்று காவிரிக் கரையில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடியவர்கள் பாவம் நீங்கி இன்புற்று வாழ வேண்டும் என்று வேண்டினார். இறைவனும் அவ்வாறே ஆகுக! என்று வரம் அருளினார்.

    10. தஞ்சை மாவட்ட ஆலயங்களில் திருவிடை மருதூர் ஆலயத்துக்குதான் அதிக பாடல்கள் கொண்ட தலபுராணம் உள்ளது. இந்த ஆலயம் பற்றி ஞானக்கூத்த சிவபிரகாச தேசிகர் என்பவர் மூவாயிரம் பாடல்கள் தலபுராணமாக பாடியுள்ளார்.

    11. தஞ்சை மாவட்ட சமய இலக்கியங்களில் திருவிடை மருதூர் தலபுராணம், திருவிடை மருதூர் உலா, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் கலம்பகம், திருவிடை மருதூர் நொண்டி நாடகம் முக்கியமானவை.

    12. சிவபெருமானின் 64 வடிவங்களுள் ராவண அனுக்கிரக மூர்த்தி அமைந்துள்ள திருத்தலம் திருவிடை மருதூர் மட்டுமே.

    13. தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான பாடல்களை பெற்ற தலங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று திருவையாறு, மற்றொன்று திருவிடை மருதூர்.

    14. தஞ்சை மாவட்டத்தில் 4 திசைகளிலும் நான்கு கோபுரங்கள் அமையப்பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று கும்பகோண கும்பேஸ்வரர் கோவில். மற்றொன்று திருவிடை மருதூர்.

    16. சோழ நாட்டில் காவிரித் தென்கரையில் இருக்கும் 128 தலங்களுள், இத்தலம் முப்பதாவதாகப் போற்றப்படுகிறது.

    17. திருவிடைமருதூரில் தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோவில்கள் உள்ளன.

    18. வைகாசி வசந்த விழா, அறுபத்து மூவர் விழா, நவராத்திரி விழா, மார்கழித் திருவாதிரை ழிழா, தைப்பூசத் திருவிழாவின் போது சுவாமி காவிரிக்கு எழுந்து அருளி ஐராவணத் துறையில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பானது.

    19. திருவிடைமருதூர் தலத்தில் காமீகாகம முறையில் நான்கு கால பூஜை நடத்தப்படுகிறது.

    20. இத்தலம் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்து இருக்கும்.

    21. இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.

    22. உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

    23. இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.

    24. இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    25. இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.

    26. பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.

    27. இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
    28. இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது.

    29. சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோவிலைத் திருப்பணி செய்துள்ளனர்.

    30. இந்த கோவிலில் சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.

    31. இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர்.

    32. இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை.

    33. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர்.

    34. பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.

    35. திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதி மங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும்.

    36. இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 இலிங்கங்கள் உள்ளன.

    37. இங்குள்ள நவக்கிரக விக்கி ரகங்கள் பிற கோவிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது

    38. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 9 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    39. இத்திருக்கோவிலில் நடைபெறும் தைப்பூசப் பெருவிழா மிகவும் தொண்மை வாய்ந்த விழாவாக அனைத்து ஊர் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    40. தைப்பூசத்தினத்தன்று விபண்டருக்குக் காட்சி அளித்ததால் இத்தலத்திற்கு இந்நாள் விசேமானது.

    41. கந்த புராணம், இலிங்க புராணம், பிரமகைவர்த்தம், சிவரகசியம் முதலிய நூல்களும் இத்திருத்தலப் பெருமைகளைக் கூறுகின்றன.
    மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம். ஆனால் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

    மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம். திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். எதற்காக?

    அர்ஜுனம் என்றால் மருதமரம். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலங்கள் அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும். வடக்கிலுள்ள ஸ்ரீசைலத்தை மல்லிகார்ஜுனம் என்றும், தெற்கில் திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடை மருதூரை ஜுடார்ஜுனம் என்றும், இவ்விரு தலங்களுக்கு நடுவில் இருப்பதால் இத்தலம் மத்தியார்ஜுனம் என பெயர் பெற்றது.

    அம்பிகை, அகத்தியர் வழிபட்ட இத்தலத்தில் சிவன் மகாலிங்க சுவாமி என்ற பெயரில் அருளுகிறார். ஏழு பிரகாரம் கொண்ட இத்தலத்தில் அம்பிகை பெருநலமாமுலையம்மன் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறாள்.

    இங்கு எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்பது நியதி. சிவன் சந்நிதி எதிரிலுள்ள கோபுரம் வழியாக நுழைந்து முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகையை தரிசித்து முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு.

    ஏதேனும் பீடை மனிதனுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோவிலை விட்டு வெளியேறும் போது தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்தால் பிடிக்காது. ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல, ஆனந்த கண்ணீர் வடித்தாள். அதுவே குளமாக உருவெடுத்தது. இது காருண்ய (கருணை) தீர்த்தம் எனப்படுகிறது.
    ஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் பாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும்.
    திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில், கோவில்பாளையம் கால காலேஸ்வரர் ஆலயம், காஞ்சீபுரம் சித்திரகுப்தர் கோவில், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயம், திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் உள்ள ஞலிவனேஸ்வரர் கோவில். இவை அனைத்தும் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் திருத்தலங்கள் ஆகும்.

    ஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் பாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் மேற்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும். நோய்வாய்ப்பட்டு அவதிப்படுபவர்களுக்கு, வழிபாட்டிற்கு பிறகான மருத்துவமும் கைகொடுக்கும்.
    ×